இதுவரை ரசிகர்கள் பார்த்திராத ஒரு ரஜினியை சனிக்கிழமை மாலை நடந்த இயக்குநர்கள் சங்கத்தின் டி 40 நிகழ்வில் பார்க்க முடிந்தது.
நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த இந்நிகழ்ச்சியில் தன்னை சூப்பர் ஸ்டாராக உயர்த்திய இயக்குநர்கள், படைப்பாளிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாகப் பங்கேற்ற ரஜினி, அவர்கள் எதிர்ப்பார்த்ததற்கும் மேலாக வருவாய் கிடைப்பதற்கு ஒரு வழி செய்து கொடுத்தார். அது, ஒரு அசத்தலான நேர்காணல் அளித்ததுதான்.
சாதாரண நேர்காணல் அல்ல… ரஜினியை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய குரு பாலச்சந்தர் கேட்க, அதற்கு ரஜினியே பதில் சொல்வது போன்ற முக்கால் மணி நேர நிகழ்ச்சி அது.
ஒரு நல்ல நேர்காணலுக்கு கேள்விகள் நன்றாக அமைய வேண்டும் என்பார்கள். இயக்குநர் சங்க விழாவில், பாலச்சந்தரின் கேள்விகள் அசத்தலாக இருந்ததால், அந்த கேள்விகளை தூக்கிச் சாப்பிடும் விதத்தில் சூப்பர் ஸ்டாரின் பதில்கள் அமைந்தன.
தனிப்பட்ட வாழ்க்கை, சின்ன வயது காதல், சினிமாவில் அடுத்த இலக்கு, அரசியல், ஆன்மீகம் இப்படி ரஜினி ஆர்வம் காட்டும் அனைத்துத் துறைகள் குறித்தும் பாலச்சந்தர் கேட்ட கேள்விக்கு பட்டுத் தெறித்தது போல பளிச் பளிச் என்று பதிலளித்து அசத்தினார் ரஜினி. பாலச்சந்தரின் கேள்விகள் நீளமாக அமைய, அவற்றுக்கு ரஜினி அளித்த பதில்கள் சுருக்கமாவும் நறுக்கென்றும் அமைந்தன.
இந்தியாவின் உச்ச நட்சத்திரமாக உள்ள ரஜினியின் உண்மையான மனநிலை, அவர் லட்சியம், இத்தனை வருடங்களில் அவர் கற்றது, பெற்றது, இழந்தது, நடிக்க முடியாத வேடம், அரசியல் ஆசை, தமிழகத்துக்கு செய்யப் போகும் நல்ல விஷயங்கள்… இவற்றுக்கெல்லாம் சற்றும் தயக்கமின்றி ரஜினி அளித்த பதில்கள், அவரிடம் நிறைய எதிர்பார்த்துக் காத்திருக்கும் தமிழகத்துக்கு நம்பிக்கை தரும் சமாச்சாரங்கள்.
பார்க்கவும், கேட்கவும், படிக்கவும் மட்டுமல்ல, இவருக்காக நிச்சயம் காத்திருக்கலாம் என்ற நம்பிக்கையை ஆழமாக விதைத்துள்ளது தலைவரின் இந்த அழுத்தமான பேட்டி!
“எதைச் செய்தாலும் உண்மையாக, முழு மனசோட செய்யணும், இல்லேன்னா சும்மா இருக்கணும்,” இதுதான் தனது மனசு என்பதை தெளிவாகப் புரிய வைத்தார் ரஜினி.
இந்த நிகழ்ச்சியின் சிகரமாக ரஜினியின் நிகழ்ச்சி அமையவேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டதை, வெள்ளிக்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பாரதிராஜா உள்ளிட்ட இயக்குநர்கள் கூறியிருந்தனர்.
எனவே, நிகழ்ச்சி தொடர்பான வீடியோ, படங்கள் வெளியில் வராமல் பார்த்துக் கொள்வதிலும் குறியாக இருந்தனர். எனவே நிகழ்ச்சிக்கு நிருபர்களை மட்டும் அழைத்தவர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் வீடியோகிராபர்களை அழைக்கவில்லை.
இதனை ஒளிபரப்பவிருக்கும் சன் தொலைக்காட்சிக்கு உண்மையிலேயே ஜாக்பாட்தான். இந்த ஒளிபரப்பு உரிமையை கணிசமான தொகைக்கு விற்று அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் இயக்குநர்கள் சங்கத்துக்கென்று கட்டடம் கட்டப் போகிறார்கள் சங்க நிர்வாகிகள் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும் (செல்வமணி போன்றவர்கள் இதை மனதில் கொண்டால் போதும்).
0 comments:
Post a Comment
Give us your comments